கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தேர்தல் முடிந்த நிலையிலும் அவர் வெற்றி பெற்றுள்ள நிலையிலும் நிறைவேற்றுவதற்கு முன்வருவாரா?
பதில்: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தபின் நிறைவேற்றுவதுதான் நியாயமான நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக ராஜபக்சே இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தவறினாலும் தாமதப்படுத்தினாலும் தி.மு.க. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இங்குள்ள கழக அரசின் சார்பாக இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்யத் தயங்காது.
கேள்வி: பொன்சேகாவை இலங்கை அதிபர் ராஜபக்சே கைது செய்து வைத்திருப்பதும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக செய்திகள் பரவுவதும் பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்: இலங்கை வரலாற்றில் அந்த காலத்திலும், இந்த காலத்திலும் யார் யாரெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள், கொலையுண்டார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். அதே நேரத்தில் இந்திய வரலாற்றில் அலெக்சாண்டரிடம் தோல்வியுற்ற புருஷோத்தம மன்னனை, அலெக்சாண்டர் எப்படி நடத்தினார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்தச் சரித்திரக் குறிப்பை இலங்கையிலே உள்ள ஆட்சியாளர்கள் மறந்திருக்க நியாயமில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.